செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், பாலாற்று பகுதியில், குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு, ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த பழைய மணப்பாக்கம், உதயம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள பாலாற்றில், திருட்டுத்தனமாக, கோணிப் பைகளில் மணல் நிரப்பி, மூட்டைகளாக அடுக்கி வைக்கின்றனர்.
இந்த மணல் மூட்டைகள், இரவு நேரங்களில், லாரி, மினி லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருக்க, போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மணல் கடத்தலுக்கு ஆதரவாக, அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
மணல் திருட்டை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படாமல் மனுக்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எனவே, குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க, மணல் திருட்டை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.