புதுடில்லி:தனியார் விமான நிறுவனமான கோ பர்ஸ்ட், திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், இந்நிறுவனம் பல்வேறு வங்கிகளிடம் இருந்து கடனாக வாங்கிஇருக்கும் 6,521 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோ பர்ஸ்ட் நிறுவனம், பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., உள்ளிட்ட பல வங்கிகளிடம் இருந்து 6,521 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி மற்றும் டாய்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளும், இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கிஉள்ளன.
இதற்கிடையே கோ பர்ஸ்ட், தன் திவால் குறித்த அறிவிப்பை வெளியிடுவதை, வங்கிகளுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் சற்று அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் வங்கிகள், கடன் விவகாரம் குறித்து விரைவில், நிறுவனத்துடன் பேச்சு நடத்தும் என தெரிகிறது. இருப்பினும், இது குறித்த மேலதிக விபரங்களைத் தெரிவிக்க, வங்கிகள் மறுத்துவிட்டன.
கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 11ஆயிரத்து, 463 கோடி ரூபாய் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விற்பனையாளர்கள், விமான குத்தகைதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கான நிலுவைத் தொகைகள் அடங்கும்.
தற்போது இந்நிறுவன சொத்துக்களின் மதிப்பு, கடன்களை சமாளிக்க போதுமானதாக இல்லை.
விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய 1,202 கோடி ரூபாயையும், விமான குத்தகைதாரர்களுக்கு வழங்க வேண்டிய 2,660 கோடி ரூபாயையும் வழங்க, இந்நிறுவனம் தவறிவிட்டதாக தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக விமான குத்தகைதாரர்கள், விமான குத்தகைக்கான ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கான நோட்டீசை, கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் சில குத்தகைதாரர்கள், விமானங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர்.
'கோ பர்ஸ்ட்' தன் சேவைகளை நிறுத்தியுள்ளதை அடுத்து, சில மார்க்கங்களில் விமானக் கட்டணங்கள் உயரும் என அஞ்சப்படுகிறது.இது குறித்து, இந்திய டிராவல் ஏஜன்ட் சங்கத் தலைவர் ஜோதி மாயல் கூறியுள்ளதாவது:கோடைகாலமான மார்ச் ௨௬ முதல் அக்., ௨௮ வரை, வாரத்துக்கு, ௧,௫௩௮ விமான சேவைகளை அளிக்க, கோ பர்ஸ்ட் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது விமான சேவையை நிறுத்தி விட்டது. இதனால், குறிப்பிட்ட மார்க்கங்களில் மற்ற விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்க, அதிக பயணியர் கூடுவர். இதையடுத்து, விமான கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.