பெங்களூரு-'அரசு பஸ்களில் புகையிலை விளம்பரங்களை அகற்றுங்கள்' என்று பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர்களுக்கு, புகையிலை இல்லா கர்நாடகா என்ற அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், தினமும் ஏராளமான பயணியர் பயணிக்கின்றனர். இதில், புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக, பொது சுகாதார ஆர்வலர்கள் மற்றும் சுகாதார சேவை சங்கங்கள் கூட்டமைப்பான, 'புகையிலை இல்லா கர்நாடகா' என்ற அமைப்பு பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
புகையிலை, மதுபான விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிலை, மதுபானம் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிகரெட், புகையிலை பொருட்களின் நேரடி மற்றும் மறைமுக விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளது. பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் லட்சக்கணக்கான பயணியர் பயணிக்கின்றனர். இந்த விளம்பரங்கள் சாலையில் செல்லும் பலருக்கும், குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இவைகளால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் மோசமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள், இத்தகைய விளம்பரங்களை பஸ்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இத்துடன் புகையிலை, மதுபான நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்படடுள்ளது.
மாநில சுகாதார துறை கமிஷனர் ரன்தீப் கூறுகையில், ''சுகாதார துறை சமீபத்தில், 'ஒன் ஸ்டாப் டுபாக்கோ' செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இதில், பொது இடங்களில் புகை பிடிப்போர் பற்றி புகார் செய்யலாம்.
''பல கிராமங்களை நாங்கள், புகையில்லா கிராமங்களாக மாற்றி உள்ளோம். பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி.,யிடம், புகையிலை, மதுபான விளம்பரங்களை அகற்றுமாறு கேட்டு கொண்டுள்ளோம்,'' என்றார்.