தந்தை எடியூரப்பாவின் பாதுகாப்பு கோட்டையான ஷிகாரிபுரா தொகுதியில் , மகன் விஜயேந்திரா போட்டியிடுகிறார். எனவே இந்த தொகுதி, மாநில அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில், முதன் முறையாக, எடியூரப்பா போட்டயிடாமல் ஷிவமொகாவின், ஷிகாரிபுரா தொகுதியில் தேர்தல் நடக்கிறது. 1983ல் இருந்து, எட்டு முறை போட்டியிட்டார். 1999ல் மட்டும் ஒரு முறை தோற்றார்.
கடந்த 2013ல் இவர் பா.ஜ.,வில் இருந்து விலகி, கே.ஜே.பி., எனும் கர்நாடக ஜனதா கட்சி துவக்கி, வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ல் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார்.
பல ஆண்டுகளாக இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், பா.ஜ.,வுக்கு பாதுகாப்பு கோட்டையை உருவாக்கி உள்ளார். 75 வயதை தாண்டியவர்களுக்கு, சீட் இல்லை என்பது, கட்சியின் எழுதப்படாத விதிமுறையாகும். இதன்படி அவர் தேர்தல் அரசியலில் இருந்து விலகினார்.
அடுத்த வாரிசு
தற்போது, எடியூரப்பாவின் அடுத்த தலைமுறை வாரிசாக, விஜயேந்திரா ஷிகாரிபுராவில் போட்டியிடுகிறார். தந்தையின் செல்வாக்கு, கட்சியின் பலம் தனக்கு அரணாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விஜயேந்திரா உள்ளார். உற்சாகத்துடன் பிரசாரம் செய்கிறார். இவருக்கு ஆதரவாக, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர்.
இந்த தேர்தல், விஜயேந்திராவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. பா.ஜ.,வில் அடுத்த தலைமுறையின் தலைவராக உருவெடுக்க உதவும் தேர்தலாகும். இவர் அரசியலுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், தேர்தலில் போட்டியிட்டதில்லை.
கடந்த 2018 தேர்தலில் மைசூரின் வருணா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் யதீந்திராவுக்கு எதிராக, விஜயேந்திரா போட்டியிடுவார் என, கூறப்பட்டது. ஆனால், விஜயேந்திராவுக்கு சீட் கிடைக்கவில்லை. இதன்பின் அவர், மாநில பாஜ., துணைத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
எதிர்காலம் முக்கியம்
தற்போதைய தேர்தல், மகனின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், அவரை வெற்றி பெற வைக்க எடியூரப்பா முயற்சிக்கிறார். விஜயேந்திராவுக்கு எதிராக, சுயேச்சை வேட்பாளர் நாகராஜ் கவுடா, அதிகபட்சமாக முயற்சிக்கிறார். காங்கிரசை சேர்ந்த இவர், தனக்கு சீட் கிடைக்காததால், சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.
இதற்கு முன், மூன்று முறை டவுன் சபை உறுப்பினராக இருந்த இவர், நான்கைந்து ஆண்டுகளாக தேர்தலில் களமிறங்க, தயாராகி வருகிறார். தொகுதியில் பிரபலமாக உள்ள சாது வீரசைவ சமுதாயத்தை சேர்ந்த நாகராஜ் கவுடா, அதே சமுதாய பலம் தனக்கு கை கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்கிறார்.
'இது, காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மாலதேஷுக்கு, பின்னடைவை ஏற்படுத்தும். விஜயேந்திராவுக்கு உதவியாக இருக்கும்,'' என, பா.ஜ., வினர் கூறுகின்றனர்.