கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும், ஆறு நாட்களே உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.
இதனால் காங்கிரஸ் தலைவர்கள் தெனாவட்டாக சுற்றுகின்றனர். சில தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்லாமல், எப்படியும் ஜெயித்து விடுவோம் என்று அலட்சியமாக உள்ளனர்.
ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்ததால், வட மாவட்டங்களையும் பிடித்து விடலாம் என்ற மிதப்பில், காங்கிரஸ் தலைவர்கள் திமிராக பேசுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை 'விஷ பாம்பு' என்று வர்ணித்தார்.
இதனால் பா.ஜ., தலைவர்கள் கொதித்து எழுந்தனர். இந்த வடு ஆறுவதற்குள் கார்கேயின் மகன் பிரியங்க், பிரதமரை 'உருப்படாத மகன்' என வசைபாடினார்.
'ஒரு நாட்டின் பிரதமரை, காங்கிரஸ் தலைவர்கள் இப்படி கீழ்தரமாக விமர்சிக்கின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை எப்படி பேசுவர்' என்று, பா.ஜ., தலைவர்கள் பிரசாரத்தை திசை திருப்பி உள்ளனர்.
ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று, காங்கிரசை, பா.ஜ., விமர்சிக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதனால் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர்கள், ஹிந்து அமைப்பினர், பஜ்ரங் தள் அமைப்பினர் வெகுண்டு எழுந்து உள்ளனர்.
பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிப்பது, ஹனுமன் பக்தர்கள் வாயை அடைக்கும் செயல் என்று, பிரதமர் மோடி காங்கிரசை விளாசினார். காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய, பா.ஜ.,க்கு நல்ல அஸ்திரம் கிடைத்து உள்ளது.
பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று, காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதற்கு சில வேட்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். 'பழம் நழுவி பாலில் விழ இருக்கும் நேரத்தில் எதற்கு இந்த வேண்டாத வேலை' என்று, வேட்பாளர்கள் சிலர் முணுமுணுத்து வருகின்றனர்
- நமது நிருபர் -.