கே.ஆர்.புரம்-தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதி, பெங்களூரு நகரில் முக்கியமான தொகுதி. அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும்.
தொகுதி மறுசீரமைப்பின் போது, 2008ல் கே.ஆர்.புரம் உருவானது. முதல் தேர்தலில் பா.ஜ., நந்தீஷ்ரெட்டி வெற்றி பெற்றார். அதன்பின், 2013, 2018 ஆகிய இரண்டு முறை நடந்த தேர்தலிலும் காங்கிரசின் பைரதி பசவராஜ் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
அதன்பின், நடந்த அரசியல் மாற்றத்தில், அவர் பா.ஜ.,வில் இணைந்தார். 2019ல் நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது, அமைச்சராக இருக்கும் அவர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார்.
முக்கியமான பண்டிகைகளுக்கு தொகுதியின் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கியே பிரபலமானவர். இம்முறையும் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
காங்கிரஸ் சார்பில் மோகன் போட்டியிடுகிறார். இவர், பைரதி பசவராஜின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர். அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்றே தெரிகிறது.
இந்த தொகுதியில் பா.ஜ.,வுக்கு தான் அதிக செல்வாக்கு இருப்பதாக அனைத்து கருத்து கணிப்பிலும் வந்துள்ளது. ஆனாலும் இரண்டு கட்சி வேட்பாளர்களும் வெற்றிக்கனியை பறிக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.
இதற்கு முந்தைய தேர்தல்களை விட, இம்முறை போட்டி கடுமையாக இருப்பதாக ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார். ஆனாலும், அமைச்சராக இருக்கும் பைரதி பசவராஜ், தொண்டர்களையும், வாக்காளர்களையும் நன்கு, 'கவனித்து' உள்ளதாக தெரிய வந்துள்ளது.