திருப்பூர்: தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், கொரோனா வார்டு காலியாகியுள்ளது. மருத்துவத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஏப்., மாத துவக்கத்தில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியதால், ஆக்சிஜன் வசதியுடன் பத்து படுக்கை கொண்ட கொரோனா வார்டு திறக்கப்பட்டது. சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி, ஏப்ரல், 10 மற்றும், 11ம் தேதி வார்டில் கொரோனா ஒத்திகை நடந்தது.
அவ்வப்போது, ஓரிருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். எதிர்பாராத விதமாக, 89 வயது முதியவர், ஏப்., 14ம் தேதி தொற்றுக்கு பலியானார். மூன்றாவது வாரம் பெண் உட்பட இருவர் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து, கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைய துவங்கியுள்ளது.
கடைசியாக சிகிச்சை பெற்று வந்த இருவர், நலம் பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக யாரும் அனுமதில்லை.இதனால், கொரோனா வார்டு காலியாகியுள்ளது.
வார்டு பொறுப்பில் இருந்து டாக்டர் உட்பட செவிலியர் குழுவினருக்கு மாற்று பணி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டு காலியாகியுள்ளதால், மருத்துவம் மற்றும் சுகாதாரக்குழுவினர் நிம் மதி அடைந்துள்ளனர்.