புதுடில்லி,;புதுடில்லியில், சாலை விபத்தில் சிக்கி, காரின் மேற்கூரையில் விழுந்த இளைஞரை 3 கி.மீ., துாரம் இழுத்து சென்று கீழே தள்ளியதால், பலத்த காயம் அடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுடில்லியின், கஸ்துாரிபா காந்தி மார்க் - டால்ஸ்டாய் மார்க் சாலை அருகே, சமீபத்தில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில், முகுல், 20, என்பவர் சாலையில் துாக்கி வீசப்பட்டார். மற்றொருவரான தீபன்ஷு வர்மா, 30, என்பவர் காரின் மேற்கூரையின் மீது பறந்து சென்று விழுந்தார்.
காரை ஓட்டி வந்தவர் அதை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார். சாலையில் சென்றவர்கள், 'மேற்கூரையில் ஒருவர் சிக்கி உள்ளார்' என சைகை வாயிலாக டிரைவரை எச்சரித்தனர்.
ஆனாலும் அவர் காரை நிறுத்தாமல் 3 கி.மீ., துாரம் சென்றார். 'டில்லி கேட்' வரை வந்ததும் திருப்பம் ஒன்றில் கார் கூரையில் இருந்த தீபன்ஷு வர்மா கீழே துாக்கி வீசப்பட்டார். டிரைவர் நிறுத்தாமல் சென்றுவிட்டார்.
பலத்த காயம் அடைந்த தீபன்ஷு வர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது உறவினரான முகுல் என்பவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
சொகுசு காரை ஓட்டிய ஹர்னீத் சிங் சாவ்லா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்து நடந்தபோது அவர் குடும்பத்துடன் காரில் சென்றதாக கூறப்படுகிறது. நகைக்கடை நடத்தி வந்த தீபன்ஷு வர்மாவின் சகோதரி உன்னாட்டி வர்மா கூறியதாவது:
கார் மிக வேகமாக வந்து மோதியதால், என் சகோதரர் அதன் மேற்கூரையில் துாக்கி வீசப்பட்டுள்ளார்.
பயந்து போன கார் ஓட்டுனர் மிகவும் வேகமாக காரை இயக்கியுள்ளார். அப்போது கூட என் சகோதரர் உயிருடன் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
காரில் இருந்து மிக வேகமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய ஹர்னீத் சிங் சாவ்லா மது போதையில் இருந்துள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.