சென்னை: திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவில் மாற்றுப் பாதை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், நுங்கம்பாக்கம் தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
இதில், கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைத்தல் தொடர்பாக வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படும் ஐந்து திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டடம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்கள், திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், கூடுதல் கமிஷனர்கள், பல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாதம் ஒருமுறைஅன்னதானம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், உபயதாரர் அன்னதான திட்டத்தையும், சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.