கோவை:கோவை மாவட்டத்தில், வரும் 13ல் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நிலுவையிலுள்ள வழக்குகளில் தீர்வு காண, தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை (லோக் அதாலத்) வரும் 13ல் நடக்கிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் ஆகிய நீதிமன்றங்களில் நடைபெறுகிறது.
சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வாகன விபத்து இழப்பீடு வழக்கு, நில ஆர்ஜிதம் , சிவில் வழக்குகள், தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட நிலுவையிலுள்ள வழக்குகள், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.
'லோக்அதாலத்' விசாரணையில் பங்கேற்க விரும்புவோருக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மே 8 முதல் 12 வரை சிறப்பு அமர்வுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.