உடுமலை: உடுமலை அருகேயுள்ள, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை நேற்று துவங்கியது. நடப்பாண்டு, ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு, உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் மதுரை அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து, 2,191 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு லட்சத்து, ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கரும்பு அரவை துவக்குவதற்காக, ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் விழா, கடந்த மாதம், 10ம் தேதி நடந்தது. 21ம் தேதி முதல், கரும்பு அரவை துவக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஆலை இயந்திரங்கள் பராமரிப்பு பணி இழுபறி காரணமாக தாமதமாகியது.
இந்நிலையில், கரும்பு அரவை பணி நேற்று துவங்கியது. விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு சர்க்கரை கட்டுமானம், 9.1 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதனால், 90 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது' என்றனர்.