புதுச்சேரி,-அண்ணா தொழிற்சங்க மே தின பொதுக்கூட்டம் முதலியார்பேட்டையில் நடந்தது.
தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், துணை தலைவர்கள் கண்ணன், கைலாசம் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாநில செயலாளர் அன்பழகன், தலைமை நிலைய பேச்சாளர் நள்ளாற்று நடராஜன் உள்ளிட்டோர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினர்.
பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
புதுச்சேரியில், கடந்த காங்., தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டது. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. பல தனியார் தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தன.
தனியார் வர்த்தக, வியாபார நிறுவனங்களில் 12 மணி நேர வேலை என்ற அவல நிலை இன்றும் தொடர்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் ஒவ்வொரு மணிக்கும் 2 மடங்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிலாளர் உரிமைச் சட்டம் புதுச்சேரியில் மீறப்படுகிறது.
துப்புரவு பணியாளர்களுக்கு தினசரி கூலியாக மாநகராட்சி பகுதியில் ரூ.770, நகராட்சி பகுதியில் ரூ. 562 வழங்க வேண்டும். ஆனால், புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.300 தரப்படுகிறது. இதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், ராஜாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உப்பளம் தொகுதி செயலாளர் துரை நன்றி கூறினார்.