விருதுநகர், : விருதுநகரில் புது முயற்சியாக மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைகால உண்டு உறைவிட 10 நாட்களுக்கான ஓவிய பயிற்சி முகாமை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.
ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் 9, 10ம் வகுப்பு மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் 75, உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 25, என 100 மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், சுற்றுலாவுடன் இலவசமாக ஓவியப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமை ஸ்ரீவில்லிபுத்துார் வி.பி.எம்.எம்., பெண்கள் கல்லூரியில் துவக்கி கலெக்டர் பேசுகையில், மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தின் பல்வேறு ஓவியக் கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குற்றாலம் சித்திரசபை, திருப்புடை மருதூர், அம்பாசமுத்திரம்(மள்ளார் கோயில், பிரம்மதேசம்) கிருஷ்ணாபுரம், வாசுதேவநல்லூர், பூலித்தேவர் அரண்மனை, கழுகுமலை முக்கால பாண்டியர் கோவில், மலையடிக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களை காண்பதற்காக கலைச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.