விழுப்புரம் : பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலை சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகராட்சி28 வது வார்டு மணி நகரில் நுாற்றுக்கும்மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்கு சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பெய்த மழையால் இந்த சாலைகள், சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பா.ஜ.,வினர் நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.