கடலுார் : மருமகனிடம் தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட மாமியாரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலுார் அடுத்த அன்னவெளியைச் சேர்ந்த செஞ்சிவேல் மனைவி விஜயா, 52; விஜயா மருமகன் ரமேஷ்ராஜா, வி.சி.க., பிரமுகர் கலைமோகன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஊரில் பேனர் வைத்துள்ளார்.
அதில் அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சிலம்பரசன் 37; உள்ளிட்டவர்கள் பெயர் இல்லை.
அதனால் கோபம் அடைந்த சிலம்பரசன் மற்றும் நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், பிரசாந்த், புருஷோத் ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரமேஷ் ராஜாவிடம், ஏன் வாழ்த்து பேனரில் எங்கள் படம் போடவில்லை என தட்டிக்கேட்டு தகராறு செய்தனர்.
தகராறு செய்தவர்களை விஜயா ஓடிவந்து தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து விஜயாவை ஆபாசமாக திட்டி, நெட்டித் தள்ளி தாக்கி, கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் செயினை அறுத்துள்ளதாக தெரிகிறது. தாக்குதலில் காயம் அடைந்த விஜயாவை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலம்பரசன், ரஞ்சித்குமார், பிரசாந்த், புருஷோத் ஆகிய நான்கு பேரை தேடி வருகின் றனர்.