மொபட் மீது பைக் மோதி
கோபி அருகே வாலிபர் பலி
கோபி அருகே, மொபட் மீது, பல்சர் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கோபி அருகே புதுக்காலனியை சேர்ந்தவர் வன்னாரை, 60 கூலித்தொழிலாளி; இவர் கொளப்பலுாரை சேர்ந்த சக்திவேல், 27, என்பவருடன் டி.வி.எஸ்., 50 மொபட்டில், கொளப்பலுார் சாலையில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளப்பலுாரை சேர்ந்த ஈஸ்வரன், 27, என்பவர் ஓட்டி சென்ற பல்சர் பைக், முன்னால் சென்ற வன்னாரையின் மொபட் மீது மோதியது.
விபத்தில் காயமடைந்த மூவரும், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஈஸ்வரன் இறந்தார். இதுகுறித்து சிறுவலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான ஈஸ்வரனுக்கு திருமணமாகி, மூன்று வயதில் ஒரு மகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோபியில் ஆயிரமாயிரம்
அறிவியல் திருவிழா
கோபி அருகே, பொலவக்காலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர்
புருேஷாத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் கலிங்கியத்தில், தன்னார்வலர் சுப்புலட்சுமி இல்லத்தில், ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. இரு பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களிடம்,
அறிவியல் சோதனைகள் நிகழ்த்தி காட்டினர்.
அம்மன் கோவிலில்
மாவிளக்கு பூஜை
ஈரோடு, சூளை பூசாரித்தோட்டம் அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
ஈரோடு, அசோகபுரம் மழை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று, மழை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, மாவிளக்கு பூஜை நடந்தது.
எலந்தகுட்டை மேட்டில்
94.40 மி.மீ., மழை
எலந்தகுட்டைமேட்டில் அதிகபட்சமாக, 94.40 மி.மீ., மழையளவு பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): ஈரோடு, 12, கோபி, 47.20, பெருந்துறை, 5, சத்தியமங்கலம், 65, தாளவாடி, 87, நம்பியூர், 63, கவுந்தப்பாடி, 2.40, பவானிசாகர், 79, வரட்டுப்பள்ளம், 16, கொடிவேரி, 73, குண்டேரிபள்ளம், 60 மி.மீ., என மொத்தம், 604 மி.மீ., மழை பதிவானது.
பவானியில் சத்துணவு
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை, சத்துணவு ஊழியர்கள் மூலமே வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆதி சேகவ பெருமாள்
கோவில் தேரோட்டம்
பவானியில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்
திருவிழா கடந்த மாதம், 26ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, ஆதிகேசவப் பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது. உதவி ஆணையர் சுவாமிநாதன், பவானி நகர தி.மு.க., செயலர் நாகராஜன், அ,தி.மு.க., நகர செயலர் சீனிவாசன், முன்னாள் நகர செயலர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கூட்ட நெரிசலில் ரூ,4,000 அபேஸ்
பவானி அருகே, மைலம்பாடி கரிய காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கும், தரிசனம் செய்வதற்கும் வந்திருந்தனர். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கோவில் பிரகாரத்தில் இருந்த ஒருவரிடம், டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த, 4,000 ரூபாயை பிளேடால் கிழித்து அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
சுகாதார நிலையத்தில்
எம்.எல்.ஏ., ஆய்வு
திங்களூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் ஆய்வு செய்தார்.
சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள, காத்திருப்போர் அறைக்கு சுற்றுச்சுவர் மற்றும் தரைத்தளம் அமைத்து தருமாறு, பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலர் பேபி கோரிக்கை வைத்தார். இதையடுத்து பொதுபணித்துறையில், அதற்குரிய மதிப்பீடு பெற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணியை செய்து வருவதாக கூறினார்.
ஆய்வின்போது, பெருந்துறை வட்டார பொறுப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் மனோஜ்குமார், திங்களூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பிரியதர்ஷினி, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10 பேர் லைசென்ஸ் ரத்து செய்ய
போக்குவரத்து போலீசார் பரிந்துரை
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 10 பேரின் லைசென்ஸ் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார், வட்டார
போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளனர்.
ஈரோடு தெற்கு போக்கு வரத்து போலீசார், ஏப்ரலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதை வாகன இயக்கம், 54, மொபைல் போன் பேசியபடி வாகன இயக்கம், 3, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, 594, உட்பட மொத்தம், 851 வழக்குகள் பதிவு செய்தனர். இதில், நான்கு லட்சத்துக்கு, 32 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
குடிபோதையில் வாகனம் இயக்கியதாக ஒன்பது பேர், அதிவேகமாக சென்ற ஒருவர் என, 10 பேர், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால், லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
கட்டட மேஸ்திரி கொலை
ஒருவர் சரண்: மற்றொருவர் கைது
ஈரோட்டில், கட்டட மேஸ்திரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, சூரம்பட்டிவலசு பாரதி
நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், 38 கட்டட மேஸ்திரி. கடந்த, 30ல், மூன்று பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் இருந்த அவரை கைகளால் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். அவரை தாக்கிய மூவரும் அங்கிருந்து தப்பினர். சூரம்பட்டி போலீசார் விசாரித்து, சூரம்பட்டிவலசு நேரு வீதியை சேர்ந்த கிருஷ்ணகுமார், 26 என்பவரை கைது செய்தனர்.
கொலையில் தொடர்புடைய பாரிவள்ளல் வீதியை சேர்ந்த ஸ்ரீதர், 25, ஸ்டாலின் வீதியை சேர்ந்த ஜீவா, 22 ஆகியோர் தலைமறைவாயினர். இந்நிலையில், ஈரோடு 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஜீவா சரணடைந்தார். அவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை, போலீசார் நேற்று அதிகாலை ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கைது செய்தனர்.
காந்தி நகர் பகுதி
மின் நிறுத்தம் ரத்து
ஈரோடு மாவட்டம், காந்தி நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காஞ்சிகோவில், சின்னியம்பாளையம், காந்தி நகர், துடுப்பதி, பெத்தாம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிக்கு இன்று (4) மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
நிர்வாக காரணத்துக்காக, இன்று நடப்பதாக இருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் மறுதேதி அறிவித்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என, ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
சொக்கநாச்சியம்மன்
கோவில் குண்டம் விழா
அந்தியூர், மே 4-
அந்தியூர், அடுத்த ஒலகடத்தில் ராஜ ராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு
தோறும், சித்திரை மாதத்தில் குண்டம் திருவிழா நடக்கும்.
அந்த வகையில், கடந்த மாதம் 18ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி, தினமும் பல்வேறு அலங்காரங்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வந்தனர். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும், கையில் பிரம்புடன் மாலையை சுற்றி, அம்மனை வழிபட்டுவிட்டு, நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டு நிகழ்வு நடந்தது. அந்தியூர், பவானி, வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். வரும், 9ல், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நம்பியூர், மே 4-
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டார சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்குவதை நிறுத்தி, சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நம்பியூர் வட்டார சத்துணவு ஊழியர் சங்க தலைவர் முருகையன் மற்றும் ஊழியர் சங்க பெண்கள் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மழை நீர் சூழ்ந்த குழிக்குள்
கார் கவிழ்ந்ததால் பரபரப்பு
கோபி, மே 4-
மழைநீர் சூழ்ந்த குழிக்குள், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, கோபி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபியில் நேற்று முன்தினம் இரவு, 47 மி.மீ., கவுந்தப்பாடி, 2, கொடிவேரியில், 73 மி.மீ., மழை பதிவானது. கோபி அருகே ஒட்டர் கரட்டுப்பாளையத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலம் கட்டுமான பணி நடக்கிறது. நேற்று முன்தினம், அப்பகுதியில் பெய்த பலத்த மழையால், பாலம் கட்டுமான பணிக்காக தோண்டிய குழி முழுவதும் மூழ்கி, மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளக்காடானது. இந்நிலையில் நம்பியூரை நோக்கி சென்ற மாருதி-800 கார், மழைநீர் சூழ்ந்திருந்த பாலம் கட்டுமான பணிக்காக தோண்டிய குழிக்குள் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பல்டி அடித்தது. தகவலறிந்த கடத்துார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, தண்ணீரில் மூழ்கிய காரை, கிரைன் கொண்டு பத்திரமாக மீட்டனர். காரில் பயணம் செய்த, மூன்று வாலிபர்கள் சிறிய காயமுமின்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தண்டு மாரியம்மன் விழா
குண்டம் இறங்கிய பக்தர்கள்
சத்தியமங்கலம், மே 4-
சத்தியமங்கலம், தண்டு
மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி வழிபாடு செய்தனர்.
பண்ணாரிஅம்மனின் தங்கையாக கருதப்படும், சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 20ல் கம்பம் நடப்பட்டது.
முக்கிய நிகழ்வான நேற்று, குண்டம் விழாவையொட்டி வரம் கேட்டல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள் படைக்கலம் எடுத்து, பவானிஆற்றுக்கு சென்று புனித நீராடி
கோவிலுக்கு வந்தனர்.
கோவில் முன் அமைக்கப்பட்ட, ஆறடி நீளமுள்ள குண்டத்திற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து கோவில் பூசாரி கோகுல் முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து பக்தர்கள், பள்ளி மாணவியர், இளைஞர்கள், பெண்கள் என, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். விழாவையொட்டி தண்டுமாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.