நாமக்கல்: 'ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எம்.பி., ராஜேஸ்குமார், மத்திய அமைச்சர் மாண்டவியாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பல இணையதளங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளன. அவற்றில், பல நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யவில்லை. அவர்களிடம் இருந்து, மருந்துகள் வாங்குவது பாதுகாப்பற்றதாக இருக்கலாம். நாளுக்கு நாள் ஆன்லைன் மருந்துகளால், போலி மருந்துகள், கலப்படம் மற்றும் காலாவதியான மருந்து குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
வணிக வலைதள மருந்துகள் பெரும்பாலும், ஆன்லைனில் மலிவாகவும், மருந்துச் சீட்டு இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மக்கள் தங்கள் உடல்நல பிரச்னைகளை புரிந்து கொள்ளவும், மருந்துகள் வாங்குவதற்கும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். மருந்தை வழங்குவதற்கு முன், நோயாளிக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துச்சீட்டு அவசியம்.
'எலெக்ட்ரானிக் ப்ரிஸ்கிரிப்ஷன் சர்வீஸ்' மூலம், மருந்துச் சீட்டு அல்லது மின்னணு மருந்துச் சீட்டை பொது மருத்துவர் அல்லது மற்றொரு சுகாதார நிபுணர் வழங்க, நமது நாட்டில் தேவையான தொழில் நுட்ப வசதி இல்லை. அதிக மக்கள் தொகை உள்ள நம் நாட்டில், மக்களின் உயிரை பணையம் வைப்பது சரியல்ல. அதனால், இவ்விஷயத்தில் தலையிட்டு, ஆன்லைன் மருந்தகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.