நாமக்கல்: 'பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை முறையாக பள்ளிக்கல்வியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர் ஸ்ரேயா சிங்
பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், வீடு வாரியாக கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது:
இலவச கட்டாய உரிமை சட்டத்தின்படி, நாமக்கல் மாவட்டத்தில், 6 முதல், 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை, முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து, பள்ளிக் கல்வியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, 30 வேலை நாட்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால், அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.
குறிப்பாக, இடம் பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த, 6 முதல், 18 வயது வரை உள்ள அனைத்து பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை, மிக சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிய வேண்டும். வீடு வாரியான கணக்கெடுப்பில், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், ஓட்டல்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், விழாக்கள் நடக்கும் பகுதிகளில், பள்ளிச்செல்லா குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.