தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆன் லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5.70 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உத்தமபாளையம் தென்னகர் காலனி சங்கீதா 23, தனியார் நிறுவன ஊழியர். இவரது அலைபேசியில் குறிப்பிட்ட எண்ணில் இருந்து பகுதி நேர வேலை தருவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த எண்ணிலிருந்து மார்ச் 31ல் குறுந்தகவலும் வந்தது. அதில், நாங்கள் கொடுக்கும் பிரபல செலிபிரிட்டிகளின் இன்ஸ்ட்டா கிராம் ஐ.டி.,யை 'பாளோஅப்' செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஐ.டி., பாளோஅப் செய்ய தலா ரூ.50 வீதம் உங்கள் வங்கிக்கணக்கு, போன்பே, கூகுள் பே வாலட்டில் செலுத்தப்படும்,' என இருந்தது. இதுகுறித்த விபரங்களை டெலிகிராம் செயலியில் 'ஆண்ட்ரு5573' என்ற ஐ.டி.யில் உங்களுக்கு பயிற்சியாளர் கற்றுக் கொடுப்பார் எனக்கூறி டெலிகிராம் லிங்க்' அனுப்பினர். அதை 'கிளிக்' செய்த சங்கீதாவிடம் போனஸ் தொகை' எனக்கூறி முதற்கட்டமாக ரூ.150 ஐ பெண்ணின் வங்கிக்கணக்கில் செலுத்தினர்.
இதனால் சங்கீதா உற்சாகமுற்றார். பின் இன்ஸ்ட்டா ஐ.டி.,க்கு ரூ.50 கிடைக்கும். இருப்பிணும் 'ப்ரிபெய்டு டாஸ்க்' செய்யாமல் இருந்தால் ரூ.25 மட்டுமே கிடைக்கும் என தெரிவித்து, இணைய முகவரியில் 'டாஸ்க்' அளித்து, அதை பணம் செலுத்தி வாங்க அறிவுறுத்தினர். இதற்காக www.worlddefcoin.com இணையத்தில் விபரங்களை சங்கீதா பதிவிட்டார்.
பின் 'டாஸ்க்'களை பணம் செலுத்தி வாங்கினார். இதுபோல அந்த இணையதள முகவரியில் தெரிவித்த டாஸ்க்களை 2023 ஏப்., 1 முதல் ஏப்., 5 வரை 6 வங்கிக்கணக்குகள், ஒரு யு.பி.ஐ., ஐ.டி., மூலம் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 180 ஐ பல தவணைகளில் செலுத்தினார்.
பிறகு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்படி சைபர் கிரைம் எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் விசாரிக்கிறார்.