வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: சரத் பவார் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் மஹா விகாஸ் அகாதி கூட்டணி உடையாது என அக்கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சரத்பவார், கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவரை தேர்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார். இந்த முடிவை மாற்ற வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சரத்பவார் விலகியதை தொடர்ந்து, அவரது மகள் சுப்ரியா சுலே அடுத்த தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகியதால், ‛மஹா விகாஸ் அகாதி' கூட்டணி முறிய வாய்ப்பில்லை. சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் அல்ல; ஆனால் சர்வாதிகாரத்துக்கு எதிரானவன். இவ்வாறு அவர் கூறினார்.