உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில், நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதால், பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டிற்கு, தினமும், 93 வழித்தடங்களில், கிராமப்புறங்களுக்கும், கோவை, பொள்ளாச்சியிலிருந்து தென்மாவட்டங்களுக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள், பல்வேறு காரணங்களால், இழுபறியாக உள்ளது. அடிப்படை வசதிகளும் மேம்படுத்தாமல், பஸ் ஸ்டாண்ட் வரும் பயணியர் திணறி வருகின்றனர்.
பழநி, கணியூர், பொள்ளாச்சி வழித்தட பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில், கழிப்பிட வசதியில்லை. இதனால், தொலைதுார பஸ்களுக்கு காத்திருக்கும் பயணியர் பாதிக்கின்றனர்.
செஞ்சேரிமலை மற்றும் திருப்பூர், ஈரோடு உட்பட பஸ்கள் நிறுத்தப்படும் இடத்திலுள்ள கழிப்பிடமும், போதிய பராமரிப்பில்லாமல் உள்ளது.
ஆனைமலை வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்தில், பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க இருக்கை உட்பட எவ்வித வசதிகளும் இல்லை.
பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து வெளியே வரும் பயணியர், பை-பாஸ் ரோட்டை கடக்கும் போது, ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, நடைபாதை கட்டப்பட்டது. இந்த நடைபாதை பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகி வருகிறது.
இதனால், ரோட்டையொட்டி நடக்கும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.