மேட்டுப்பாளையம்: காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி, காரமடையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 120 சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, ஒவ்வொரு மையத்திலும் பணியாற்றுகின்றனர். காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க ஒன்றிய தலைவர் பிரகலதா தலைமை வகித்தார். முதல்வரின் காலை உணவு திட்டத்தை, மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக வழங்குவதை கைவிட்டு, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் பேசினர். இதில், 80க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.