சூலுார்: சூலுாரில் கனமழையால் கழிவு நீர் தேங்கியதால், மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சூலுாரில் கன மழை காரணமாக, தாழ்வான பகுதிகளை நோக்கி மழை நீர் ஓடியது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ரோட்டில் ஓடியது. பல இடங்களில் சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடைத்து கொண்டன.
கந்தசாமி பிள்ளை வீதியில் சாக்கடை கால்வாய் பணி நடப்பதால், கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி இருந்தது. அதனுடன் மழை நீரும் சேர்ந்து அந்த வீதியில் தேங்கி நின்றது. வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் தவித்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சாக்கடை கால்வாய் கட்டும் பணி மந்தமாக நடப்பதால், கழிவு நீர் நாலாபுறமும் தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனுடன் மழை நீரும் சேர்ந்து சேறும், சகதியுமாக தேங்கி உள்ளது. மக்கள் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சாக்கடையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.