மேட்டுப்பாளையம்: அதிக பணம் வாங்கிக் கொண்டு, சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதாக, ஐ.டி.ஐ., முதல்வர் மீது, மாணவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ., உள்ளது. இதில் ஐ.டி.ஐ., யில், 2 ஆண்டு பாடத்திட்ட வகுப்புகள் உள்ளன. 2018ல் இருந்து, 2020 வரை படித்த மாணவர்கள், ஐ.டி.ஐ., முதல்வர் முத்துக்குமார் மீது போலீஸ் புகார் செய்துள்ளனர்.
மனுவில், 'ஐ.டி.ஐ., முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் சான்றிதழ் தரவில்லை.
முதல்வரிடம் கேட்டபோது, நிர்வாகத்துக்கு கட்ட வேண்டிய பணம் பெண்டிங் இருப்பதாக கூறினார். ஆனால் எங்களிடம் முதல்வர் அதிகமான பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தையும், சான்றிதழையும், பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனுவில் கூறியிருந்தனர்.
மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் விசாரணை நடத்தினர். இதில் உடனடியாக சான்றிதழ் வழங்குவதாக முதல்வர் கூறியதை அடுத்து, மாணவர்கள் கல்லுாரிக்கு சென்றனர்.
ஐ.டி.ஐ., நிர்வாக செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''மாணவர்களுக்கு சான்றிதழ்கள் எவ்வித தடையும் இல்லாமல், வழங்கப்பட்டு வருகின்றன.
அதிகமாக பெற்ற தொகையை, உடனடியாக வழங்க வேண்டும் என, ஐ.டி.ஐ., முதல்வரிடம் கூறியுள்ளோம். இதுகுறித்து, 15ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், நிர்வாகத்தின் சார்பில் முதல்வரிடம் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.