மைசூரு,-''காங்கிரசின் சித்தராமையா, அலசி, ஆராய்ந்து இறுதியாக வருணா தொகுதிக்கு வந்துள்ளார். இதில் அவர் வெற்றி பெற்று காண்பிக்கட்டும்,'' என பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் சவால் விடுத்தார்.
மைசூரில் அவர் கூறியதாவது:
நான் 50 ஆண்டு காலமாக, அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக போராடி முன்னேறினேன். யாருக்கும் நான் தலை வணங்க மாட்டேன். சுதந்திரம் வந்த பின், தலித்துகள் சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை, கவனிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனை கூறினேன். காங்கிரஸ் அரசால், தலித்துகளுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.
சித்தராமையா சுயநலவாதி. முதல்வராகும் நோக்கில், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வரை தோற்கடித்தார். தலித்துகளை வளர விடவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போராட்டக்காரர் அல்ல; சந்தர்ப்பவாதி.
அவர் எப்போதும், போராடி முன்னுக்கு வந்தவர் அல்ல. இவர் லோக்சபா தேர்தலில், தோல்வியை அனுபவித்தவர். ஆனால் அதிகாரம் இல்லாமல், அவரால் வாழ முடியாது. காங்கிரசின் சித்தராமையா, அலசி, ஆராய்ந்து இறுதியாக வருணா தொகுதிக்கு வந்துள்ளார். இதில் அவர் வெற்றி பெற்று காண்பிக்கட்டும் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.