ஷிவமொகா,-''சமரச அரசியலில் ஈடுபடும் நிலையில், எடியூரப்பாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ இல்லை. இத்தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,'' என ஷிகாரிபுரா பா.ஜ., வேட்பாளர் விஜயேந்திரா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இதுவரை ஷிகாரிபுரா, எடியூரப்பாவின் கர்ம பூமியாக இருந்தது. இது எனக்கு பிறந்த இடமும் கூட. ஷிகாரிபுராவில் உள்ள அனைத்து பூத்களிலும் ஏற்கனவே மூன்று முறை சென்று பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.
தொண்டர்கள் உற்சாகமாகவும், கடினமாகவும் உழைத்து வருகின்றனர். நல்ல அமைப்பு உள்ளதால் வெற்றி எளிதானது.
2004 சட்டசபை தேர்தலில், ஷிகாரிபுரா வாக்காளர்கள், எடியூரப்பாவை 46 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். இம்முறை 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
ஷிகாரிபுராவில் சமரச அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியின் அமைப்பு, தொண்டர்கள் உழைப்பு, வளர்ச்சி பணிகளே எங்களுக்கு பாதுகாப்பு. விஷ விதைகளை விதைத்து, சமூகத்தை பிளவுபடுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.