ஊட்டி:ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரியில் துவக்கப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஒரு குடும்பத்துக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பாலகொலா கிராமத்தில் இந்த திட்டம் துவக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு கேழ்வரகு வழங்கி, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 2.29 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 439 டன், தர்மபுரியில், 4.60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 932 டன் கேழ்வரகு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கேழ்வரகுக்கு 32 ரூபாய் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால், அதன் விளைச்சலை பொறுத்து படிப்படியாக பிற மாவட்டங்களில் இந்த திட்டம் துவக்கப்படும்.
கேழ்வரகு அதிகளவில் சாகுபடி செய்யப்படும் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுதானிய சாகுபடி செய்யும் பிற மாவட்டங்களில் படிப்படியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தகுதியுள்ள 14 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்கள், 'நெட் பேங்க்கிங்' வாயிலாக 45 ரூபாய் செலுத்தினால் அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சக்கரபாணி பேசினார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், ''தமிழகத்தில் 34 ஆயிரத்து 291 ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.
'மாநிலத்தில், 5,013 கோடி ரூபாய் நகைக் கடன், 2,256 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவிக் குழு கடன், 12,400 கோடி ரூபாய் பயிர்க் கடன்' என, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அம்ரித் உட்பட பலர் பங்கேற்றனர்.