கோவை: துாய்மைப் பணியாளர்கள் நல வாரியத்துக்கு, புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளின் கீழ், பல லட்சம் துாய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நலனுக்காக, தமிழ்நாடு துாய்மைப் பணியாளர் நல வாரியம், 2007ல் உருவாக்கப்பட்டது.
தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்ட இந்த வாரியத்தில், 13 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 11 அலுவல் சாரா உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். தி.மு.க., ஆட்சிக்குப் பின், 2011-2021 வரை, பத்தாண்டுகளாக வாரியம் செயல்பாடின்றி இருந்தது.
அ.தி.மு.க., ஆட்சியின் முடிவுக்காலத்தில், இக்குழுவில் 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வாரியத்தின் கூட்டம் நடக்காமலே இருந்தது.
இதனால் வாரியத்தின் செயல்பாடுகள் முடங்கி இருந்தன. இதுபற்றி, 'இரு ஆண்டாக கூடாத துாய்மைப் பணியாளர் நல வாரியம்' என்ற தலைப்பில், ஏப்.,21 அன்று, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, வாரியத்தைத் திருத்தியமைத்து, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நேற்று முன் தினம் புதிய அரசாணை (எண்:61) வெளியிட்டுள்ளது. இதில், அலுவல் சார்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 13 லிருந்து 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; அலுவல் சாராத உறுப்பினர்களின் எண்ணிக்கை, 14லிருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த கனிமொழி பத்மநாபன் என்பவர், உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேரை, அலுவல் சாராத உறுப்பினர்களாக நியமித்து, இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனியாவது துாய்மைப் பணியாளர் நல வாரியம், சிறப்பாகச் செயல்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கருணாநிதி இந்த வாரியத்தைத் துவக்கியபோது, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள்தான், அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் வாரியம் திருத்தியமைக்கப்பட்டபோது, புதிதாக நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்கள் 14 பேர்களில் கட்சிக்காரர்கள் 6 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிதான் உப தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.ஆனால் இப்போது உப தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் அனைவருமே, ஆளும்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு இருப்பதாக, துாய்மைப் பணியாளர்களுக்கான அமைப்புகளின் நிர்வாகிகள் குமுறுகின்றனர். முன்பு, அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, இதில் அலுவல் சாரா உறுப்பினர்களாக இருந்தனர். இப்போது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.