சேலம்:சேலத்தில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்வோரின் வீடுகளை குறி வைத்து திருடும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
சேலத்தில் ஏப்.1 முதல் தனியார் பள்ளிகள் சிலவற்றில் ஒன்பதாம் வகுப்பு வரை விடுமுறை கோடை விடுமுறை விடப்பட்டது. ஏப். 20ல், பத்தாம் வகுப்பு தேர்வு நிறைவடைந்தது. தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசு பள்ளிகளிலும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏராளமானோர் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கின்றனர். சேலத்தை சொந்த ஊராக கொண்டவர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லிமலை உள்ளிட்ட நீர்நிலை, குளிர் பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்கின்றனர்.
வெளியூர் செல்வோரின் வீடுகளில் நள்ளிரவு நேரங்களிலும், சில இடங்களில் பட்டப்பகலிலும் பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டும், 25 வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதில் 18க்கு மட்டுமே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூன்று இடங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே மாதத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும், ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., டாஸ்மாக் அலுவலர் என, 5 பேர் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வீடுகளில் நடந்த கொள்ளைக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது சேலம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் சுற்றுலா பயணத் திட்டங்களை ரத்து செய்து விட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:
சேலம் மாநகரில் உள்ள 14 ஸ்டேஷன்களிலும் குற்றப்பிரிவுக்கு பிரத்யேக இன்ஸ்பெக்டர் நியமித்த போதும் போதிய போலீசார் இல்லை. இதனால் நடந்த சம்பவங்களுக்கு வழக்குப்பதிவு, குற்றவாளிகள் குறித்த விசாரணை மட்டும் நடக்கிறது. குப்பம், திருச்சி ராம்ஜி நகர் கும்பல், சேலத்தில் முகாமிட்டு கொள்ளையடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.