ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று முன் தினம் மாலை வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
தமிழக - கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின்படி, 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு வினாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு, 4,000 கன அடியாகவும், மாலை 6:00 மணிக்கு, 11 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
இதனால், ஒகேனக்கல்லில் நீரின்றி வறண்டு கிடந்த ஐந்தருவி, ஐவர்பாணி மற்றும் பிரதான அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், பரிசல்கள் ஐந்தருவி வரை மட்டுமே இயக்கப்பட்டன. இரண்டு வாரங்களாக வினாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று அதிகரித்து, பாறைகளை மூடியபடி தண்ணீர் பாய்ந்தோடியது.