கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 19 ல் கொடியேற்றம் நடந்தது.அன்று முதல் 21 நாட்களுக்கு திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அம்மன் விதவிதமான அலங்காரத்தில் வீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுத்தல் நேற்று முன் தினம் இரவு முதல் துவங்கியது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள்.
உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண் பானை, அலகு குத்தி வருதல் போன்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். நேற்று காலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கில் பெண்கள் திரண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. கிராம கமிட்டியார் தலையிட்டு அனைவரும் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.
தொடர்ந்து பாரதியார் நகர், கிராம சாவடி தெரு, மணிநகரம், நாட்டுக்கல், ஆங்கூர்பாளையம் ரோடு, வடக்கு பட்டி, குட்டியாபிள்ளை வீதி, தியாகி வெங்கடாச்சலம் வீதி, போர்டு ஸ்கூல் தெரு, பார்க் ரோடு உள்ளிட்ட பல வீதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப்பெரியாற்றில் கலக்கினர். திருவிழா மே 9 வரை நடைபெறும். ஏற்பாடுகளை கிராம கமிட்டியாரும், ஹிந்து அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.