சென்னை,: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரை, 'நாலாந்திர பேச்சாளர்' என, தி.மு.க,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' விமர்ச்சித்துள்ளதால், கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, நாளை மறுதினம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.தி.மு.க., ஆட்சியில், வேங்கைவயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு, சொத்து வரி, குடிநீர், பால் விலை உயர்வு, காவல் நிலைய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கிளம்பின.
இதை முன்வைத்து, தி.மு.க., அரசுக்கு, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதே நேரம், இந்திய கம்யூ., கட்சி, வி.சி., உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க., அரசை மென்மையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்பு குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலித்தது.
இந்நிலையில், சட்டசபையில் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட, 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் போர்க்கோலம் பூண்டது.
மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினரும், அக்கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத் தலைவருமான சவுந்தரராஜன், 'தமிழக அரசுக்கு எதிராக தொழிலாளர் போராட்டம் வெடிக்கும்' என எச்சரித்தார்.
இந்நிலையில் மே 1-ல், சென்னை கோயம்பேட்டில் நடந்த தொழிலாளர் தின பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான டி.கே.ரங்கராஜன் பங்கேற்றார்.
அவர், 'தமிழகத்தை தி.மு.க., அரசு ஆட்சி செய்கிறதா அல்லது அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கின்றனரா? அதிகாரிகள் அரசை தவறாக வழிநடத்துகின்றனர்.
தி.மு.க., அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், இந்த சட்டத்தை கொண்டு வர காரணமான அதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்' என, கடுமையாக பேசினார்.
இந்த செய்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாளிதழான 'தீக்கதிரில்' 3-ம் தேதி வெளியானது.
அதற்கு பதிலடியாக, தி.மு.க.,வின் முரசொலி நாளிதழில் நேற்று வெளியான கட்டுரை:
தி.மு.க., அரசை, அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர் என, எதை வைத்து சொல்கிறார்; எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார் என்பதை, டி.கே.ரங்கராஜன் சொல்ல வேண்டும்.
பொத்தாம் பொதுவாக நாலாந்திர பேச்சாளர் போல, கூட்டணியில் இருந்து கொண்டே கூக்குரலிடுவது தான் கூட்டணி தர்மமா?
தமிழக மார்க்சிஸ்ட் கட்சியை, யாரோ தவறாக வழிநடத்துகின்றனரா என்பது தான் நம் சந்தேகம்.'சர்வாதிகார ஹிந்துத்துவாவிற்கு, திராவிட மாடல் மாற்றாகாது; திராவிடம் என்பது இனவாதம்' என மார்க்சிஸ்ட் புத்தகம் வெளியிடுகிறது.
தி.மு.க., அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்... என சொல்கிற தகுதியோ, யோக்கியதையோ, ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவரை கடும் சொற்களால் முரசொலி விமர்சித்துள்ளதன் வாயிலாக, தி.மு.க., கூட்டணியில் பகிரங்க மோதல் வெடித்துள்ளது.