'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என்ற, கவர்னர் ரவியின் கருத்துக்கு, தி.மு.க., பொதுக் கூட்டங்களில் பேச்சாளர்கள் வாயிலாக பதிலடி கொடுக்க, அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.
வரும் 7ல், தி.மு.க, அரசின் இரண்டாம் ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுதும் நடக்க உள்ளன.
'மகளிருக்கு இலவச பஸ், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலை சிற்றுண்டித் திட்டம்' என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
இவை திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களாக, மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில், தெருமுனைக் கூட்டம், திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், வரும் 7, 8, 9 ஆகிய 3 நாட்களில், 1,222 பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், கட்சியினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு கவர்னர் ரவி அளித்த பேட்டியில், 'திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அக்கொள்கைகளை வைத்து, திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துகின்றனர்.
'திராவிட மாடல் கொள்கைகள், ஒரே நாடு, ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது' என, கூறியுள்ளார்.
கவர்னரின் கருத்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
பின், தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ''அனைவரும் சமம் என்பது தான் திராவிட மாடல்; அது நீர்த்து போகவில்லை.
ஒரே நாடு என்றால் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் ஏன் போர் வர வேண்டும்? ஒரு நாடாக இல்லாத காரணத்தால் தான், மன்னர் மானியம் என்ற திட்டமே வந்தது,'' என்றார்.
தி.மு.க., அரசின் சாதனைகள் மக்களிடம் சென்றடையும் நேரத்தில், 'திராவிட மாடல் காலாவதியாகி விட்டது' என்ற கவர்னர் ரவியின் கருத்து, பேசுபொருளாகி உள்ளது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, தி.மு.க.,வின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் அமைய வேண்டும் என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கவர்னர் ரவியின் கருத்துக்கு நேரடி பதில் தர விரும்பாமல், 'திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக பார்முலா' என, தன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வாயிலாக, முதல்வர் கூறியிருக்கிறார்.
அவரது கடிதம் விபரம்:
திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை பொறுக்க முடியாமல், திசை திருப்பும் வகையில், அரசியல் கட்சியினர், ஆதாரமற்ற பல வீடியோக்களை பரப்புகின்றனர்.
இலவச திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டு விட்டதாக, இழிவாக பேசியவர்கள், கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் அளித்த வாக்குறுதிகளில் இருந்து, அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக 'பார்முலா' என்பது, உறுதியாகி உள்ளது.
இருளை விரட்டிய இரண்டாண்டு கால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -