சென்னை:'அனுமதி இல்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிக்கவே, புதிய சட்ட திருத்தத்தை, அரசு கொண்டு வந்துள்ளது' என, நகர்ப்புற அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கடந்த 2018ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் விளம்பரப் பலகைகளை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதனால், ஒரு சில நிறுவனங்கள் மட்டும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டடங்களில் விளம்பரம் செய்யும், ஏகபோக சூழல் உருவாக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சில விளம்பர நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்த வழக்கில், சட்ட திருத்தத்துக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க, அ.தி.மு.க., அரசுக்கு உத்தரவிட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுதும், விளம்பரப் பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்த, 'தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் - 2022'ல், உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டன.
இச்சட்டம் மற்றும் விதிகள், ஏப்., 14ம் தேதி முதல் செயலில் உள்ளன. இதன் அடிப்படை நோக்கம், அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அறவே அனுமதிக்கக் கூடாது என்பது தான். இச்சட்டத்திற்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
சட்டத்தை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கும் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். கடந்த ஆறு மாதங்களில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட, 500க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
ஆனால், இன்றும் 697 விளம்பரப் பலகைகள், நீதிமன்ற தடையுத்தரவுகளால், சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழல் உள்ளது. அவற்றையும் அகற்ற, சென்னை மாநகராட்சி சார்பில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை, அடியோடு அகற்றுவதே, தி.மு.க., அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.