மதுரை : 'பிரச்னைகள் கொண்ட பாதையே சரியான பாதை' என மதுரை சின்மயா மிஷனில் நடந்த விழாவில் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் பெண் தொழில் முனைவோர் தலைவர் ராஜகுமாரி ஜீவகன் பேசினார்.
மதுரை சின்மயா மிஷன் சார்பில் 18ம் ஆண்டு குழந்தைகளுக்கான 'லீட் 2023' கோடைகால பண்பாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா சுவாமி சிவயோகானந்தா தலைமையில் நடந்தது. 6 முதல் 14 வயது குழந்தைகள் பங்கேற்ற இம்முகாமில் பூஜை வழிபாடு, யோகா, வேத மந்திரங்கள், பஜனை, ஓவியம், கைவினைப்பொருட்கள், சுயமேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டன. இம்முகாம் 6 நாட்கள் நடந்தன.
சிறப்பு விருந்தினர் பெண் தொழில் முனைவோர் தலைவர் ராஜகுமாரி ஜீவகன் பேசுகையில், ''குழந்தைகளுக்கு மன அமைதியை பெற்றோர் உருவாக்க வேண்டும். சரியான இடத்தில் பாராட்டவும், தவறு செய்யும் போது அறிவுறுத்தவும் வேண்டும். தெளிவுடன் சிந்தித்து செய்தால் பல வாய்ப்புகள் கைகூடும். எனவே மனவலிமையுடன், எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குங்கள். குடும்பம், சமுதாயம் என செல்லும் பாதையில் பிரச்னைகள் இல்லை என்றால் அது தவறான பாதை. பிரச்னைகளை கொண்டதே சரியான பாதை'' என்றார்.
நிறைவு விழாவில் குழந்தைகள் மாத்ரு பூஜை செய்து, கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர். சின்மயா தேவி குழு, யுவகேந்திரா உறுப்பினர் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.