சிவகங்கை:தமிழகத்தில் 11 மண்டலங்களில் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் கல்வி பயிற்சி வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி தொல்லியல் ஆராய்ச்சியில் 2500 க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டறிந்து தமிழர்களின் பழங்கால நாகரீகத்தை வெளிகாட்டினர். தமிழர்களின் பெருமையை மாணவர்களுக்கு எடுத்து செல்லும் விதமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் கல்வி சார்ந்த பயிற்சி வழங்க ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்துார், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 11 மண்டலங்களில் குழுவிற்கு 25 பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு 25 குழுக்களாக பிரித்து மாநில அளவில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஜூன் 18 ல் தொடங்கி டிச., 23 வரை நடக்கிறது. 4 நாட்கள் பயிற்சி வகுப்பு, இரண்டு நாட்கள் தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு கள ஆய்வுக்கு அழைத்து செல்லப்படுவர்.
16 பயிற்சிகள்
தொல்லியல் ஓர் அறிமுகம், கல்வெட்டியல், கிரந்த எழுத்துக்கள், பல்லவர், சோழர், பாண்டியர்கள் கால கலை, கட்டடக்கலை, பழைய, புதிய கற்கால, இரும்பு கால பண்பாடு, தமிழிக் கல்வெட்டு, செப்பேடுகள், வட்டெழுத்து கல்வெட்டு, நாணயவியல், நடுகற்கள், பாறை ஓவியங்கள், வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன.