வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-கேரளாவில் உள்ள மசூதியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜோடிக்கு நடந்த திருமணம் குறித்த 'வீடியோ'வை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் இல்லாததால், அஞ்சுவின் தாய், அருகில் உள்ள மசூதிக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் முறையிட்டார்.
இதையடுத்து, திருமணத்தை தாங்களே முழு செலவும் செய்து நடத்தி வைப்பதாக ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதன்படி, அங்குள்ள மசூதியில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மசூதி வாயிலில் வாழை மரம் கட்டப்பட்டு, புரோகிதர் வேத மந்திரங்களை முழங்க, அஞ்சுவின் கழுத்தில் சரத் தாலி கட்டினார். இந்த திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு, மசூதி வளாகத்திலேயே சைவ உணவு பரிமாறப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோவை பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'இது மற்றொரு கேரள ஸ்டோரி' என்ற தலைப்பில், 'மனித குலத்துக்கான அன்பு நிபந்தனையற்றதாகவும், ஆறுதல் தெரிவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்' என, பதிவிட்டார்.
கேரளாவைச் சேர்ந்த ஹிந்து பெண்கள், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றப்பட்டு, அவர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற கதையை மையமாக வைத்து, தி கேரள ஸ்டோரி என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த விவகாரம் கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வீடியோவை ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இது, வேகமாக பரவி வருகிறது.