புதுச்சேரி-புதுச்சேரியில் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் இணைப்பு தர நான்கு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் இணைப்பு வழங்கிட மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. பரிட்சாத்தமாக தமிழகத்தில், நாகை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 15 முதல் 20 சதவீதம் காஸ் பயன்பாடு குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதனையொட்டி, புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதை, செயல்படுத்திட 4 தனியார் நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை அமல் படுத்த புதுச்சேரி அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்காக தொழில்துறை மூலம் விதிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளனர்.
குழாய்களை எந்த வழியாக, எத்தனை அடி ஆழத்தில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து விதிமுறைகள் வகுப்பதற்கான பூர்வாங்க பணி துவங்கியுள்ளது.
விரைவில் இதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன்பிறகு பரிட்சார்த்த முறையில் ஏதேனும் ஒரு பகுதியில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும்.