சிதம்பரம்,-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேம்பஸ் டெக்னாலஜியுடன் துணை வேந்தர் கதிரேசன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கற்பித்தல் - கற்றல், மதிப்பீடு, அங்கீகாரம், தரவரிசை மற்றும் பிறகல்வி சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் டைம்ஸ் இன்டர்நெட், டைம்ஸ்ஆப் இந்தியா குழும நிறுவனமான கேம்பஸ் டெக்னாலஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் முன்னிலையில் பதிவாளர் சிங்காரவேல், கேம்பஸ் டெக்னாலஜி இயக்குனர் சுமன்நந்தி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கேம்பஸ் டெக்னாலஜி, அதன் மொத்த தரமதிப்பீடு மென்பொருளை வழங்கும்.
கேம்பஸ் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் இந்த மென்பொருள் அரசாங்கப் பல்கலைக் கழகங்களுக்கு தர மேலாண்மை, தர மேம்பாடு மற்றும் தரக் கண்காணிப்பு ஆகியவற்றில் உதவுவதற்காக தனித்துவமாக தயாரிக்கப்பட்டதாகும்.
ஆன்லைன் வலை போர்டலைப் பயன்படுத்தி அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் தரவு சேகரிப்பு, அங்கீகாரத் தரவை நிர்வகித்தல் செயற்கை நுண்ணறிவினால் ஆவணங்களை சரிபார்த்தல், இணையதளத்துடன் இணைத்தல், நிலை கண்காணிப்பு அறிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு இந்த மென்பொருள் உதவுகிறது.
பல்கலைக்கழகத்தின் உள்தர உறுதிப்பிரிவு கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் கல்விக்கான சர்வதேச மற்றும் தேசிய ஒத்துழைப்பு பிரிவு ஆகிய துறைகள் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.