போச்சம்பள்ளி: மத்துார் ஒன்றியம் களர்பதி பஞ்.,ல் உள்ள, மேக்கலாம்பட்டி சின்னஏரி, 34 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் சுற்று வட்டாரத்தில், 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த ஏரிக்கு கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் உபரி நீர் செல்ல கோடிக்கரை உள்ளது. இதன், வடக்கு பகுதியிலுள்ள, 40 அடி அகலமுள்ள உபரிநீர் செல்லும் கோடிக்கரை கடந்த ஓராண்டிற்கு முன் சேதமானதால், ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால், இந்த ஏரி நிரம்பினால், தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும். இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமாகி உள்ள கோடிக்கரையை அகற்றிவிட்டு, புதிய கோடிக்கரை அமைத்து, தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில், விவசாயம் செய்ய நீர் ஆதாரமாக உள்ளது, இந்த ஏரி மட்டும் தான். இதன் கோடிக்கரை ஓராண்டிற்கு முன் பெய்த தொடர் மழையால் சேதமாகியது. தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. ஏரியில் நீர் நிரம்பினால் சேதமான கோடிக்கரையால் தண்ணீர் முழுவதும் வெளியேறி விடும். அதனால் சேதமான கோடிக்கரையை அதிகாரிகள் சரிசெய்து கொடுக்க வேண்டும்' என்றனர்.