மஞ்சள் மார்க்கெட்
இன்று விடுமுறை
வணிகர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மஞ்சள் ஏலத்துக்கு, இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில், திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.
வணிகர் தினமான இன்று, மஞ்சள் ஏல விற்பனையில் வணிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், இதனால் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். வரும், 8ல் வழக்கம் போல மஞ்சள் ஏலம் நடக்கும்.
2 கோவில்களில்
உண்டியல் திருட்டு
தாளவாடி அருகே இரு கோவில்களில், உண்டியலை ஆசாமிகள் திருடிச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி அருகே ஒங்கனபுரம் கிராமத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, கதவை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமிகள், உண்டியலை உடைத்து துாக்கி
சென்றனர்.
இதேபோல் பீம்ராஜ் நகர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். ஒரே இரவில் இரு கோவில்களில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாளவாடி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில்
ஆசாமிகள் கைவரிசை
தாளவாடியில், ராமாபுரம் பிரிவில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. ஊழியர் சக்கரபாணி நேற்று நேற்று வழக்கம்போல் கடை திறக்க சென்றுள்ளார்.
கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மதுபாட்டில் திருட்டு போனது தெரியவந்தது. அவர் புகாரின்படி சென்ற தாளவாடி போலீசார், கடையில் ஆய்வில் ஈடுபட்டனர். 'சிசிடிவி' காட்சிகள் மற்றும் கைரேகை அடிப்படையில், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கும்பாபிஷேக விழா
ஈரோடு மாமரத்துப்பாளையம் விநாயகர், காளியம்மன், கருப்பண்ணசாமி, கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
அதை தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
விபத்தில்
தொழிலாளி பலி
அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 44, கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., மொபட்டில், அந்தியூர் - மந்தை சாலையில் பெய்யேரிக்கரை அருகே சென்றார்.
அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார்.
இதையறிந்த டிராக்டர் டிரைவர் ஓட்டம் பிடித்தார். அந்தியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊருக்குள் புகுந்த யானை
அத்தாணி அருகே அச்சம்
அத்தாணி அருகே வரப்பள்ளம் ஆற்றங்கரையோரத்தில், குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை ஆண் யானை, நேற்று காலை புகுந்தது. தகவலறிந்து சென்ற வனத்துறையினர், பட்டாசு வைத்தும், ஊர்மக்கள் உதவியுடன் இசை வாத்தியங்கள் வாசித்தும், 12:30 மணி வரை போராடி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகிலுள்ள அடசபாளையம் கிராமத்தில் ஒரு கரும்பு தோட்டத்தில் புகுந்தது.
மகுடேஸ்வரருக்கு
காவிரியில் தீர்த்தவாரி
கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை ஒட்டி, காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், சூலதேவர், சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து காவிரி நதியில் புனித நீராடல் நடந்தது. குருக்கள் மற்றும் பட்டர்கள் தீர்த்தவாரியை நடத்தினர். இதில் நிர்வாக அதிகாரிகள், கட்டளைதாரர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் மகுடேஸ்வரர், கருட வாகனத்தில் வீரநாராயண பெருமாள் சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா சென்றனர்.
அரசு பள்ளிகளில் 'ரிசல்ட்'
அலுவலர்கள் விளக்கம்
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வியின் கீழ் வரும் அரசு, மாநகராட்சி துவக்க, நடுநிலை பள்ளிகளில் கடந்த, 2ல் தேர்வு முடிவு வெளியானது. தற்போது இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாகி உள்ளது. அதேவேளை மேல்நிலை கல்விக்கு உட்பட்ட அரசு, மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: ஒன்று முதல் எட்டு வரை மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒன்பதாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு முடிவு அறிவிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியும் முடிந்து விட்டது. வரும் வாரத்தில் அரசு ஒப்புதலுடன் தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு கூறினர்.
3 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்து, 48 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் ஏழு பேர் நேற்று குணமடைந்தனர். அதேநேரம் புதிதாக மூன்று பேருக்கு தொற்று ஏற்படவே, சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை, 44 ஆனது.பட்டத்தரசியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
ஈரோடு, நேதாஜி ரோடு, முனிசிபல் சத்திரத்தில், பிரசித்தி பெற்ற பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், ஏழு கன்னிமார் கோவில் உள்ளது. இங்கு, 63ம் ஆண்டாக நடப்பாண்டு சித்திரை திருவிழா, 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள், நேற்று தீர்த்தம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். இன்று பொங்கல் வைத்து, கிடா வெட்டு நடக்கிறது. மதுரை வீரனுக்கு சிறப்பு மிக்க நாடகமும் நடக்கிறது. கம்பத்தை நாளை வாய்க்காலில் விடுதல் மற்றும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
சித்தர் விழா கொண்டாட்டம்
பரம்பரை சித்த மருத்துவர் மன்றம் சார்பில், ஈரோட்டில் சித்தர் விழா கொண்டாடினர். மன்ற நிறுவனர் வக்கீல் தர்மையா தலைமை வகித்தார். 'சித்தர் கை கண்ட மணி மந்திர வைத்தியம்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. மூத்த பரம்பரை சித்த வைத்தியர்கள் ஸ்ரீநிவாசன், மாரிமுத்து, வடிவேல் ஜெகதீசன் ஆகியோருக்கு 'வைத்திய சிரோன்மணி' விருது அளிக்கப்பட்டது.
மூலிகைகளை மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், மூலிகை கண்காட்சி நடத்தி வரும் சாமியாத்தாளுக்கு, 'மூலிகை சிரோன்மணி' விருது வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது நன்றி கூறினார்.
டாஸ்மாக் கடைக்கு ௩ நாட்களுக்கு 'லீவு'
கர்நாடகா மாநிலத்தில் வரும், ௧௦ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பிரசாரம் 8ம் தேதி மாலை, 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு அம்மாநில தேர்தல் கமிஷன், ஈரோடு மாவட்ட கலால் துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில், 8ம் தேதி மாலை, 6:00 மணி முதல், 10ம் தேதி நள்ளிரவு வரை அதாவது, மூன்று நாட்களுக்கு, தமிழகம்-கர்நாடகா எல்லையில் உள்ள, தாளவாடி பாரதிபுரத்தில் உள்ள, தமிழக அரசின் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கும். கர்நாடகா மாநில எல்லையில் இருந்து, 4 கி.மீ., துாரத்துக்குள் இருப்பதால், கடையை மூட தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை திறக்கப்படாது.
ஹனுமந்தராய சுவாமி
கோவிலில் தேரோட்டம்
தாராபுரம், பூங்கா சாலையில் உள்ள காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலில் நடப்பாண்டு தேர் திருவிழா, கடந்த மாதம், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற நிலையில், மே 2ல் ராமர்-சீதா திருக்கல்யாணம்
நடந்தது.
இந்நிலையில் விழா முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல் நேற்று காலை, 9:00 மணியளவில் நடந்தது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணகுமார், காவல்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்பட நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்தனர். கல்யாண ராமர் கோவில் வீதி, அனுமந்தாபுரம் பகுதிகளில், சாலையின் இருபுறமும் திரண்ட நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். இன்று கொடி இறக்கத்துடன், விழா நிறைவடைகிறது.
பட விளக்கம்: தாராபுரத்தில் ஹனுமந்தராய சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
கார் மோதிய விபத்தில்
கல்லுாரி மாணவி பலி
தாராபுரம் அருகே, கார் மோதியதில், கல்லுாரி மாணவி பலியானார்.
தாராபுரத்தை அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்த செல்வம் மகள் வித்யாஸ்ரீ, 19; தாராபுரம், பைபாஸ் சாலையில் உள்ள கலை அறிவியல் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்தார். நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து, டி.வி.எஸ். மொபட்டில் சென்றார். தாராபுரம் ஐ.டி.ஐ. அருகே சென்றபோது, கோவையை சேர்ந்த அஸ்வின், 30, ஓட்டிச்சென்ற ஆடி சொகுசு கார், வித்யாஸ்ரீ சென்ற மொபட்டில் மோதியது.
படுகாயமடைந்தவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார். சில மாதங்களுக்கு முன் இவரது தந்தை செல்வம் இறந்தார். இந்நிலையில் அவரது மகளும், விபத்தில் பலியானது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கொடிவேரி தடுப்பணையில்
சுற்றுலா பயணிகள் அனுமதி
கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர்.
கொடிவேரி தடுப்பணை பகுதியில், கடந்த, 2ம் தேதி இரவு, 73 மி.மீ., மழை பெய்தது. இதனால் தடுப்பணைக்கு, 2,000 கன அடி மழைநீர் வரத்தானதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் வரத்தானது. இதனால் நேற்று காலை முதல், தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அரசு மருத்துவரை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கணேஷ்குமார். இவர், செவிலியர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அரசு ஆரம்பம் சுகாதார நிலையத்தில், நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் பாலாமணி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில நிர்வாகி உஷாராணி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, ராஜு உள்பட, 50க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.
சங்கமேஸ்வரர் கோவில்
தேரோட்டம் கோலாகலம்
சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
பவானி சங்கமேஸ்ரவர் கோவில், சித்திரை தேரோட்டம், கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் நடந்தது. முன்னதாக திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. மேட்டூர் ரோடு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்தது. கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், பவானி நகராட்சி தலைவர் சிந்துாரி உள்ளிட்ட பலர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் செல்லும் பாதையில் திரண்ட பக்தர்கள், தரிசனம் செய்தனர்.
எரிந்த டிரான்ஸ்பார்மர்
பலியான வண்டி மாடு
மாநகரில் பலத்த காற்று, மின்னல், இடியுடன் மழை பெய்தது. இந்நிலையில் இரவு, 7:00 மணிக்கு மின்னல் தாக்கியபோது, அகில்மேடு மூன்றாவது வீதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அகில்மேடு வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை உட்பட சில பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டீச்சர்ஸ் காலனி, மேட்டூர் சாலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பகுதிகளில் தெரு விளக்குகள் முற்றிலும் எரியவில்லை. இதேபோல் நாடார்மேடு, எஸ்.கே.சி., சாலை, திண்டல் உள்ளிட்ட சில பகுதிகளிலும் அவ்வப்போது மின்தடையாவதும், மீண்டும் இணைப்பும் கிடைத்தது.
ஈரோடு, ஸ்டார் தியேட்டர் எதிர்புறம் சாலையோரத்தில் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால், மூட்டைகளை ஏற்றி வந்த வண்டியில் இருந்த ஒரு மாடு, மின்சாரம் பாய்ந்து இறந்தது.
இன்று சித்ரா பவுர்ணமி
கொங்கணர் சித்தர் குகைக்கு
செல்ல பக்தர்களுக்கு தடை
ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை, ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்காமல், போக்கு காட்டி வருகிறது. இன்று சித்ரா பவுர்ணமி என்பதால், கொங்கண சித்தர் குகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். சிறுத்தை நடமாட்டத்தால், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பூஜை செய்பவர்கள் மட்டும், வனத்துறையினர் பாதுகாப்புடன் சென்று பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறையினர் நேற்று காலை ரோந்து சென்றபோது, கொங்கண சித்தர் குகை அருகே சிறுத்தை அமர்ந்துள்ளதை பார்த்துள்ளனர். இதனால் ஓரிரு நாட்களுக்குள் சிறுத்தையை பிடித்துவிடுவோம் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்
நந்தா பொறியியல் கல்லுாரி
மாணவர்கள் தேசிய சாதனை
இந்திய வாகன பொறியாளர் கூட்டமைப்பின், தெற்கு பிராந்தியம் சார்பில், திண்டுக்கல் பி,எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில், தேசிய சைக்கிள் வடிவமைப்பு போட்டி நடந்தது. இதில், 42 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி இயந்திரவியல் மாணவர்கள், துறை தலைவர் ஈஸ்வரமூர்த்தி
தலைமையில், மூன்று அணிகளாக கலந்து கொண்டனர். மாணவர்கள் ராஜவிக்னேஷ், புகழேந்தி, சந்தோஷ், யுவராஜ், நந்தகுமார், சுர்ஜித்குமார் மற்றும் தமிழினியா வடிவமைத்த சைக்கிள் மாதிரி, இரண்டாமிடம்
பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், செயலர் நந்தகுமார் பிரதீப் மற்றும் நிர்வாகிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.