பள்ளிபாளையத்தில்
கோடைகால
கிரிக்கெட் பயிற்சி
பள்ளிபாளையம அருகே, எஸ்.பி.பி.,காலனி விளையாட்டு மைதானத்தில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும், 11 முதல் துவக்கப்படவுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சுப்பிர
மணியம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இணைந்து கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும், 11 துவங்கி, 31 வரை பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி., காலனி விளையாட்டு மைதானத்தில் காலை, 6:30 முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 முதல், 6:00 மணி வரையும் நடைபெறவுள்ளது. முகாமில், 12 முதல், 19 வயது வரை உள்ள வீரர்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேங்காய் பருப்பு
இன்று ஏலம்
நாமகிரிப்பேட்டை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மஞ்சள் ஏலமும், வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று தேங்காய் பருப்பு வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும் என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொட்டிரெட்டிபட்டியில்
பகவதியம்மன் தேர்த்திருவிழா
எருமப்பட்டி அருகே, பெட்டிரெட்டிபட்டி பகவதியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எருமப்பட்டி அருகே, பெட்டிரெட்டிபட்டியில் பகவதியம்மன் கோவில் உள்ளது. சித்திரை மாத திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த, 25ல் துவங்கியது. இதையடுத்து, நேற்று முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, தேர்த் திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பகவதியம்மன் துாக்கு தேரை, பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு சென்றனர். இந்த தேருக்கு பெண்கள் தேங்காய், பழம் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
ரூ.5.60 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
ப.வேலுார், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 7,234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று, 88.30 ரூபாய், குறைந்தபட்சமாக, 55.80 ரூபாய், சராசரியாக, 82.90 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஐந்து லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தீயணைப்பு துறை சார்பில்
செயல்முறை விளக்க முகாம்
குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில், விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம், நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் நடந்தது.
தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, காஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அரசு பள்ளியில்
அறிவியல் திருவிழா
பள்ளிபாளையம் ஒன்றியம், கண்டிபுதுார் அரசு தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல்
திருவிழாவை நடத்தியது.
வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், அறிவியல் திருவிழாவை துவக்கி வைத்து, மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ளும் வகையில் கருத்துக்களை கூறினார். இதையடுத்து எளிய அறிவியல் பரிசோதனை, கற்பனையும் கைத்திறனும், சமையலறையில் அறிவியல், புதிர் கணக்குகள் மாணவர்களிடையே செய்து காண்பித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக வினாடி வினா போட்டி நடந்தது. பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் (பொ) புவனேஸ்வரி, இல்லம் தேடி கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், வானவில் மன்றம் கருத்தாளர் குணசேகர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவியருக்கு
கோடைகால பயிற்சி முகாம்
ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கோடைகால கலை பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடக்கிறது.
நாமக்கல், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் கலை பண்பாட்டு துறை சார்பில், மே 1 முதல், 15 வரை, 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான யோகா, கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், கைவினை பொருட்கள் தயாரிப்பு கலை, தப்பாட்டம், கரகம், காவடி உள்ளிட்ட கிராமிய நடனம் ஆகியவைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை கற்றுத்தரப்படுகிறது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிபாளையம் அடுத்த கண்டிபுதுார் பகுதியில் உள்ள, பள்ளிபாளையம் வட்டாரக்கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று வட்டார தலைவர் கண்ணன் தலைமையில், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் தகுதியுடைய இடைநிலை ஆசிரியருக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் வகையில், திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் முருக.செல்வராசன், மாவட்ட செயலாளர் சங்கர், வட்டார செயலாளர் இளையராஜா ஆகியோர் பேசினர்.
கொல்லிமலை பள்ளி மாணவர்கள்
7 பேர் ஜே.இ.இ.,தேர்வில் தேர்ச்சி
கொல்லிமலை உறைவிடப்பள்ளி மாணவர்கள் ஏழு பேர், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில், ஆண்டுதோறும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., நிறுவனங்களில் பொறியியல் படிக்க, ஜே.இ.இ., தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. கடந்த பிப்., மாதம் நடந்த தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, 108 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடந்த மாதம் முடிவு வெளியானது. இதில், 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 15 பேர் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வுக்கு சென்னை சென்றுள்ளனர்.
அதேசமயம் கொல்லிமலை உள்ள அரசு ஏகலைவா, மாதிரி உறைவிடப்பள்ளியில் படித்த ஏழு மலைவாழ் மாணவ, மாணவியர், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வுக்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
எருமப்பட்டி பகுதியில் மழை
வீணான 15 லட்சம் செங்கல்
எருமப்பட்டி பகுதியில் பெய்த கன மழையால், தயார் செய்து வைத்திருந்த, 15 லட்சம் செங்கல்கள் மழையில் நனைந்து வீணானதாக தொழிலாளர்கள் கூறினர்.
எருமப்பட்டியை சுற்றியுள்ள அலங்காநத்தம், போடிநாய்க்கன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக கோடை வெயிலால் கூலி தொழிலாளர்கள், செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், கடந்த 2ல் பெய்த மழையால், சூளைகளில் தயார் செய்து வைத்திருந்த, 15 லட்சம் செங்கல்கள் மழை நீரில் நனைந்து வீணானதாக தொழிலாளர்கள் கூறினர்.
மாவட்ட அளவிலான
கண்காணிப்பு குழு கூட்டம்
மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவின் முதல் காலாண்டு கூட்டம் மற்றும் இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடந்தது. இதில், நகராட்சி பகுதிகள், பேரூராட்சி, கிராமப்புறப் பகுதிகளில் இயன் முறையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் எவரும் இல்லை என்பதை கண்டறிய வேண்டும்.
மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு பணியாளர்களை பணியமர்த்துவதை தவிர்த்தல், பொருளாதார நிலை மற்றும் சமுக மறுவாழ்வு குறித்து ஆராய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராயல் இன்டர்நேஷனல் பள்ளி ஜே.இ.இ., தேர்வில் சாதனை
குமாரபாளையம், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில், பிளஸ் -2 படித்த மாணவர்கள் கடந்த மாதம் நடந்த ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அதிக மதிப்
பெண்களை பெற்று சாதனை படைத்தனர். மாணவி மலர்விழி, 95.54 சதவீதம், விகேஷ், 94.82 சதவீதம், ராகுல், 94.09 சதவீதம், ஸ்ரேயா, 91.21 சதவீதம், அபிஷேக், 90.08 சதவீதம் மதிப்பெண்களை பெற்றனர்.
இந்த மாணவர்கள் என்.ஐ.டி., கல்லுாரியில் சேருவதற்கும் மற்றும் அனைத்து மாணவர்கள் ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வுக்கும் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் அன்பழகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்த், முதல்வர் அனிதா ஆண்ட்ரோ, இயக்குனர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.