மியூச்சுவல் பண்ட்களின் பதிவு மற்றும் பரிமாற்ற முகவரான கேம்ஸ் (CAMS) வெளியிட்டுள்ள தகவல் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம். கடந்த 5 ஆண்டுகளில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் 90ஸ் கிட்கள். அதாவது 90களில் பிறந்த இளைஞர்கள்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 17வது சிஐஐ மியூச்சுவல் பண்ட் உச்சி மாநாட்டில், 'வளர்ந்து வரும் மில்லினியல் முதலீட்டாளர்களின் வேகம் தொடரும்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது. கேம்ஸ் நிறுவனம் மூலமாக நடந்த மியூச்சுவல் பண்ட் பரிவர்த்தனைகளிலிருந்து கிடைத்த தரவுகளை வைத்து இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளனர். கேம்ஸ் நிறுவனம் இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் 69% பங்களிப்பு செய்கிறது. 2019 - 23 வரையிலான நிதியாண்டில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யத் துவங்கிய இளைஞர்கள் குறித்து அறிக்கை கவனம் செலுத்துகிறது.
அறிக்கையில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:-
2019 - 2023 நிதியாண்டில் 1.6 கோடி பேர் புதிதாக மியூச்சுவல் பண்ட்டை தங்களின் பணத்தை பெருக்குவதற்காக தேர்வு செய்துள்ளனர். இதில் 54% பேர், அதாவது 85 லட்சம் பேர் 90களின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் பிறந்தவர்கள்.
இந்த காலக்கட்டத்தில் முதலீடு செய்த மில்லினியல்கள் மார்ச் 2023 நிலவரப்படி, ரூ.96,000 கோடி மதிப்புடைய பணத்தை தங்கள் மியூச்சுவல் பண்ட் கணக்குகளில் வைத்துள்ளனர்.
90% இளம் தலைமுறையினர் பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களையே முதலீட்டுக்கு தேர்வு செய்துள்ளனர். பிறர் கடன் சார் மியூச்சுவல் பண்ட்களில் பணத்தைப் போட்டுள்ளனர்.
மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இளம் தலைமுறையினரில் 21% பேர் செக்டோரல் எனும் துறை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களை தேர்வு செய்து முதலீடு செய்திருக்கிறார்கள். அதாவது ஐடி பண்ட், வங்கி பண்ட், ரியல் எஸ்டேட் பண்ட், உற்பத்தி சார்ந்த பண்ட், மருத்துவத் துறை சார்ந்த பண்ட் என இவ்வாறு துறை வாரியான பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சிறு நிறுவனங்களை தங்கள் போர்ட்போலியோவில் கொண்ட பண்ட்களில் 13% பேர் முதலீடு செய்துள்ளனர்.
ப்ளெக்ஸி கேப் எனும் கலவையான நிறுவனங்களை கொண்ட பண்ட் திட்டத்தை 13% பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
லார்ஜ் கேப்பில் 7%, மிட் கேப்பில் 8%, ஈ.எல்.எஸ்.எஸ்.,ல் 8% மல்டி கேப்பில் 6% பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்த இளம் முதலீட்டாளர்களில் 99% பேர் நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த 85 லட்சம் இளைஞர்களில் 95% பேர் மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள், நிதி ஆலோசகர்கள் மூலமாக வந்தவர்கள். 5% இளைஞர்கள் மட்டுமே டைரக்ட் பண்ட்களில் முதலீடு செய்தவர்கள்.