மூணாறு-கேரளாவில் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கலக்கிய அரிசி கொம்பன் ஆண் யானையின் கதை மலையாளத்தில் அரிக்கொம்பன் என்ற பெயரில் சினிமாவாக தயாராகிறது.
கேரளாவில் அரிசி கொம்பன் யானை 10க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்ததுடன் பல்வேறு கட்டடங்கள், வீடுகளையும் சேதப்படுத்தியது.
துவக்கத்தில் அரிசி கொம்பன் யானை மீது அனைவருக்கும் வெறுப்பு ஏற்பட்டது.
ஆனால், ஏப்., 29ல் வனத்துறையினர், இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த பின், அதன் மீது பலருக்கும் அனுதாபம் ஏற்பட்டது.
இந்நிலையில் அரிசி கொம்பனின் கதை மலையாளத்தில், அரிக்கொம்பன் என்ற பெயரில் சினிமாவாக தயாராகிறது.
பெரியகானல் அருகே, இறந்த தாய் யானையின் உடல் அருகே குட்டியாக இருந்த அரிசி கொம்பன் நாள் முழுதும் பாச போராட்டம் நடத்தியது.
இச்சம்பவம் முதல், இதை மயக்க ஊசி செலுத்தி பெரியாறு புலிகள் காப்பகம் எடுத்துச் செல்லும் வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி கதை தயாராகி உள்ளது.
படத்தை சாஜித் யாஹியா இயக்குகிறார். நடிகர்கள் தேர்வு நடக்கிறது. படத்தின் நாயகனாக கருதப்படும் அரிசி கொம்பனாக நடிக்கவும், பிற யானைகளுக்கும் கும்கி யானைகளின் தேர்வு முடிந்தது.
அரிசி கொம்பன் நடமாடிய சின்னக்கானலில் வனத்துறையினரின் அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் பாதுஷா தெரிவித்தார்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் பதிவிட்ட அரிக்கொம்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேகமாக பரவி வருகிறது.
மேகமலையில் யானை
கேரளாவில் சமீபத்தில் மயக்க ஊசி செலுத்தி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசிகொம்பன் யானை தற்போது தமிழகத்தின் தேனி வனப்பகுதிக்கு வந்துள்ளது.
இதுபற்றி மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் கூறியதாவது:
இரு நாட்களாக மேகமலை பகுதியில் அரிசி கொம்பனின் நடமாட்டம் உள்ளது. இதை வனத்துறையின் சிறப்பு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சின்னமனுாரில் இருந்து, ஹைவேவிஸ் என்ற இடத்துக்கு செல்ல, மலைப்பகுதியில் 16 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நேற்று காலை, 10வது கொண்டை ஊசி வளைவில், இந்த யானையை வன ஊழியர்கள் பார்த்தனர்.
கேரள அதிகாரிகளிடம் இருந்து பெற்ற கண்காணிப்பு கருவி வாயிலாக, அரிசிகொம்பனின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.