சென்னை: கண்ணகி நகரைச் சேர்ந்தவர் நித்தியா, 34. ஆணான இவர் மீது, திருட்டு, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி. சில நாட்களுக்குமுன், சிறையில் இருந்து வெளியே வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், இந்திரா காந்தி நகர் குறுக்கு தெருவில், ஆறு பேருடன் அமர்ந்து மது அருந்தினார். இதில், நித்தியாவிடம் முன்விரோதம் உள்ள நபர்களும் இருந்தனர்.
போதை ஏறியதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ஏற்கனவே தயாராக வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும், நித்தியாவை கொலை செய்தனர்.
பின், அருகில் உள்ள ஒரு ஹோட்டல் வாசலில் உடலை துாக்கி வீசிவிட்டு, '108' ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து தப்பி சென்றனர்.
கண்ணகி நகர் போலீசார், நித்தியாவை வீட்டில் இருந்து அழைத்து சென்ற வீரமருது, 34, உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து விசாரிக்கின்றனர். முக்கிய குற்றவாளி சிக்கியதும், கொலைக்கான விபரம் தெரிய வரும் என, போலீசார் கூறினர்.