திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவில், மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டது.
மேலும், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, பக்தர்களுக்கு விபூதி அளித்து, பல நோய்களை தீர்த்தும், கந்தனுக்கு நித்ய பூஜைகளை செய்தார்.
கந்தனை பற்றி, 726 பாடல்களையும் பாடிஉள்ளார். வைகாசி விசாகம், பவுர்ணமி நாளில், மடத்தில் ஜோதி வடிவில் மறைந்தார்.
இதையடுத்து, வைகாசி விசாக நாளில், சிதம்பர சுவாமிகளின் குரு பூஜை விழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன், சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகள் துவக்கப்பட்டன.
சிதம்பர சுவாமிகளின் சன்னிதி, தியான மண்டபம், அன்னதானக் கூடம் ஆகியவற்றின் பணிகள் முழுமையாக முடிக்கப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது, இப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மடத்தின் திருப்பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.