சென்னை: ஆன்லைன் முறையிலான பத்திரப் பதிவை, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எளிமைப்படுத்த, 'ஸ்டார் 3.0' மென் பொருள் தயாரிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகள், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக உருவாக்கப்பட்ட, 'ஸ்டார் 2.0' மென் பொருள் தற்போது அமலில் உள்ளது.
தற்போது பத்திரப்பதிவை எளிமையாக்கும் வகையில், 'ஸ்டார் 3.0' மென் பொருள் உருவாக்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்து இருந்தது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்த உத்தரவு:
பத்திரப்பதிவை எளிமையாக்க, 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு, மென் பொருள் எளிமையாக்கல் குழு, சென்னை மண்டல டி.ஐ.ஜி., சேகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், இரு மாவட்ட பதிவாளர்கள், இரு சார் - பதிவாளர்கள், ஒரு உதவியாளர் இருப்பர்.
கோவை மண்டல டி.ஐ.ஜி., சாமிநாதன் தலைமையிலான மென்பொருள் ஒருங்கிணைப்புக்கான ஆலோசனை குழுவில், மூன்று மாவட்ட பதிவாளர்கள், ஒரு சார் - பதிவாளர், ஒரு உதவியாளர் இருப்பர்.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பணிகளை எளிமையாக்கவும், குறிப்பிட்ட தகவல்களை தானியங்கி முறையில் சரி பார்க்கவும், குறைபாடுகளை நீக்கவும், இக்குழுவினர் ஆலோசனைகளை வழங்குவர்.
இது தொடர்பான அறிக்கையை, மே 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.