பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 10 வாகனங்களை பிடித்த போக்குவரத்து அதிகாரிகள், 2,44,500 ரூபாய் அபராதம் மற்றும் வரியை வசூலித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் குழுவாக பிரிந்து வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், விதிமுறை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில், போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகிறதா என குழுவாக பிரிந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அதில், கோவில்பாளையம் அருகே எஸ்.மேட்டுப்பாளையம், ஆனைமலை பகுதிகளில், கனிமவளங்களை அதிகளவு ஏற்றி வந்த ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், அதிகளவு பாரம், தகுதிச்சான்று இல்லாதது காரணங்களால் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்று, கேரளாவில் இருந்து கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, சொந்த வாகனத்தில் உரிய அனுமதியின்றி ஆட்களை அதிகளவு ஏற்றி வந்த நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம், 10 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரியாக, 2 லட்சத்து, 44ஆயிரத்து, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர், தெரிவித்தார்.