'போகர் ஜெயந்தி மற்றும் சித்தர் வழிபாட்டை நிறுத்த, ஹிந்து அறநிலையத்துறை சதி செய்கிறது' என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
மே, 18ம் தேதி போகர் ஜெயந்தி நடக்க உள்ளது. இவ்விழா தொன்று தொட்டு பழநியில் ஆண்டுதோறும் புலிப்பாணி பாத்திரசாமியால் நடத்தப்படுகிறது. போகர் ஜீவசமாதி கோவில், புலிப்பாணி ஆசிரமம் கட்டுப்பாட்டில் தான் தற்போது வரை உள்ளது.
ஆனால், இந்தாண்டு போகர் ஜெயந்தியை நடத்த ஹிந்து அறநிலையத் துறையும், பழநி இணை கமிஷனர் நடராஜன் என்பவரும் தடை விதித்துள்ளனர். இது, முற்றிலும் சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது.
பழநி கோவில் தண்டாயுதபாணியை உருவாக்கிய போகருக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால், தண்டாயுதபாணியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்; ஆட்சிக்கு ஆபத்தாக கூட நேரிடும் என்று ஆன்மிக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உடனடியாக, தமிழக அரசும், ஹிந்து அறநிலையத்துறையும், பழநி தேவஸ்தானமும் வரும், 18ம் தேதி போகர் ஜெயந்தி பூஜையை, கடந்த ஆண்டை போல நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.