- நமது நிருபர் -
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில், 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, 'பிரார்த்தனா டிரைவ் இன்' திரையரங்க வளாகம், அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளது.
சென்னையில் முதன்முதலாக, காரில் சென்று, அதில் அமர்ந்தபடியே திறந்தவெளியில் திரைப்படம் பார்க்கலாம் என்ற புதிய வசதியை, பிரார்த்தனா டிரைவ் இன் திரையரங்கம் வழங்கியது.
கடந்த 1991ல், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி தேவநாதன், இந்த வளாகத்தை துவக்கினார்.
பொதுமக்கள் மூடப்பட்ட கட்டடத்துக்குள் அடைபடாமல், மாலை நேரத்து கடற்கரை காற்றை அனுபவித்தபடி, காரில் இருந்தபடியே சொகுசாக படம் பார்க்க, இது சிறந்த வாய்ப்பாக இருந்தது.
காரில் வருபவர்களுக்காக திறந்தவெளி திரையரங்கம் போன்று, இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க, ஆராதனா என்ற திரையரங்கமும் இந்த வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
சென்னை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருவோரும், சுற்றுலா பயணியரும் இங்கு ஆர்வத்துடன் படம் பார்க்க வருவர்.
தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த திரையரங்கம், கடந்த 2021ல் சில நிர்வாக காரணங்களால் மூடப்பட்டது.
தற்போதைய சூழலுக்கு ஏற்ப மேம்பாட்டு பணிகள் நடக்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த வளாகம் தற்போது, தனியார் கட்டுமான நிறுவனத்தின் கைக்கு மாறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கட்டுமான நிறுவனம், இந்த வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈஞ்சம்பாக்கத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கடல் வரை, 25 ஏக்கராக இந்த வளாகம் பரவி உள்ளது. இங்கு, கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, புதிய கட்டுமான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிந்துள்ளது.
இந்த வளாகம் ஒட்டுமொத்தமாக, பாஷ்யம் நிறுவன கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது, அறிவிப்பு பலகைகள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதே நேரம், ஆவண ரீதியாக இதில் பத்திரப்பதிவு எதுவும் நடந்ததாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
சென்னையில் பாரம்பரிய சிறப்புடன் செயல்பட்டு வந்த பல்வேறு திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவரும் வரிசையில், தற்போது பிரார்த்தனா டிரைவ் இன் திரையரங்கமும் சேர்ந்துள்ளது.